சாதிமீறி திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.

பீகாரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவரை, மரத்தில் கட்டிவைத்து அடிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

பிகார் மாநிலம், நவாடா மாவட்டம், ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறி, வேறு சாதியைச் சேர்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.

சாதி மீறி திருமணம் செய்து கொண்ட அவர்கள் இருவரையும், ராஜூலி கிராமத்து பஞ்சாயத்தார் தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த பெண்ணும், இளைஞனும் பஞ்சாயத்தாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். அப்போது, அந்த பெண்ணை அவர்கள் அடித்து இழுத்துச் சென்றனர். ராஜூலி கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டப்பட்டு, சாதி மீறி திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பஞ்சாயத்தார் அளித்த உத்தரவின்படி, அந்த பெண்ணை சுமார் 5 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் அடித்துள்ளனர். அடிதாங்க முடியாமல் அந்த பெண் பலமுறை மயங்கி விழுந்துள்ளார். அப்போதுகூட அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

ராஜூலி கிராம பஞ்சாயத்தின் உத்தரவை அந்த பெண்ணின் பெற்றோரும் ஆதரித்துள்ளனர். மகளை, ஊர்மக்கள் அடித்து உதைப்பதை அவர்களும் வேடிக்கைப் பார்த்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெண்ணின் தந்தை, தன்னுடைய விருப்பத்தை மீறி சாதி மாறி மகள் செய்து கொண்ட திருமணத்தைதான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த காட்சியை சமூக வலைத்தளத்தில் பார்த்த பலர், இது ஒரு கூடாரமா என்றும், இதுக்கு தீர்வே கிடையாதா என தங்களுடைய ஆதங்கத்தை தெறிவித்து வருகிறார்கள்.