இந்திய விஞ்ஞானிகள் 'சமுத்திரயான்' திட்டத்தின் கீழ் 6,000 மீட்டர் ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். 'மத்ஸ்யா' என்ற நீர்மூழ்கி வாகனம் மூலம் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

இந்திய விஞ்ஞானிகள் இதுவரை கண்டிராத ஆழத்திற்குச் செல்லும் ஒரு மகத்தான ஆழ்கடல் பயணத்தைத் தொடங்கத் தயாராகி வருகின்றனர். 'சமுத்திரயான்' என்ற திட்டத்தின் கீழ், கடல் மேற்பரப்பிலிருந்து 6,000 மீட்டர் ஆழத்திற்குப் பயணம் செய்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளனர்.

ஒருசில நாடுகளே நிகழ்த்தியுள்ள இந்த தொழில்நுட்ப சாதனையை இந்தியா விரைவில் எட்டவுள்ளது. இத்திட்டம் இந்திய விஞ்ஞானிகளின் முதல் ஆழ்கடல் பயணமாக இருக்கும். இதன் மூலம், வான்வெளியிலிருந்து ஆழ்கடல் வரை தனது ஆய்வு எல்லையை விரிவுபடுத்தியுள்ள சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணையும்.

கொச்சியில் உள்ள ICAR-மத்திய கடல் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) செவ்வாய்க்கிழமை, மே 13 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIOT) இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், அரசாங்கத்தின் திட்டங்களையும் காலக்கெடுவையும் எடுத்துக் கூறினார். புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் NIOT இந்த பயணத்திற்கு தலைமை தாங்குகிறது.

Scroll to load tweet…

'மத்ஸ்யா' நீர்மூழ்கி வாகனம்:

'சமுத்திரயான்' திட்டத்தின் ஒரு பகுதியாக, 'மத்ஸ்யா' என்ற நீர்மூழ்கி வாகனத்தை இந்தியா பயன்படுத்தவுள்ளது. 25 டன் எடையுள்ள டைட்டானியத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாகனம், ஆழ்கடலின் கடுமையான அழுத்தம் மற்றும் குளிரைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மூழ்கிக் வாகனம் 3 குழு உறுப்பினர்களை ஆழ்கடலுக்குள் அழைத்துச் செல்லும். அங்கு அவர்கள் உயிரியல் மற்றும் புவியியல் மாதிரிகளை சேகரிக்க உள்ளனர். சுற்றுச்சூழல் கண்காணிப்பு, எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு பயன்படும் கனிம வளங்கள் பற்றியும் அவர்கள் ஆராய்வார்கள்.

இந்த பணி தற்போது ஆயத்த நிலையில் உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 500 மீட்டர் ஆழத்தில் இந்த வாகனத்தை மூழ்கச் செய்து சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 6,000 மீட்டர் ஆழத்திற்கான பயணம் பல கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு முறையும் இறங்குவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். இதேபோல ஆழ்கடலில் இருந்து திரும்புவதற்கும் 4 மணிநேரம் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்:

"சமுத்திரயான் என்பது கடல்சார் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் மட்டுமல்ல; இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனையும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் பறைசாற்றுகிறது," என்று NIOT இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறுகிறார். இந்த பணி ஆழ்கடல் பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றத்தின் தாக்கம், கடல் படுகையில் காணப்படும் அரிய தாதுக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் திறனை கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மத்ஸ்யா, மிகக் கடுமையான சூழல்களில்கூட இயங்கக்கூடியது. ஒளிபுகாத ஆழ்கடலின் இருண்ட பகுதியிலும், பூஜ்ஜியத்திற்கு அருகிலுள்ள வெப்பநிலையில், கடல் மட்ட அழுத்தத்தை விட 600 மடங்கு அதிகமான அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது. இந்த பயணங்களிலிருந்து கொண்டுவரப்படும் தரவுகள் மற்றும் பொருட்கள் கடல் அறிவியல், மருந்து ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு புதிய தகவல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘சமுத்திரஜீவ’ தொழில்நுட்பம்:

சமுத்திரயான் அறிமுகக் கூட்டத்தில் 'சமுத்திரஜீவ' என்ற இணையான தொழில்நுட்ப முயற்சியும் வெளியிடப்பட்டது. இதில் திறன்மிக்க மின்னணு மீன் கூண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கூண்டுகள் மூலம் மீன்களின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வாழ்விடத்தை கண்காணிக்க முடியும். இது இந்தியாவின் உணவு பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு தீர்வை வழங்குகிறது. இந்த 'சமுத்திரஜீவ' தொழில்நுட்பம் தற்போது செயல் விளக்க நிலையில் உள்ளது.

ஆழ்கடல் மற்றும் நிலையான கடல்சார் மீன்வளம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் இரட்டை முனைப்பு, அதன் கடல்சார் திறன்களின் மூலோபாய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. கடல் படுகை வளங்கள் மற்றும் கடல்சார் ஆராய்ச்சி எல்லைகள் மீதான உலகளாவிய போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், சமுத்திரயான் போன்ற பணிகள் இந்தியாவின் அறிவியல் மற்றும் புவிசார் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கனவே ஆழ்கடல் ஆய்வில் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆராய்ச்சி மற்றும் கடல்சார் தொழில்நுட்பம் இரண்டிலும் கவனம் செலுத்தும் நோக்கில் இந்தியா இத்துறையில் களமிறங்குகிறது.