நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான 14 வயது சிறுவன்.. கேரளாவில் அதிர்ச்சி.. உஷார் நிலையில் அரசு!
கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேரளா. மலப்புரம் பாண்டிக்காடு பஞ்சாயத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் கவலைக்கிடமான நிலையில் இருந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதிப்படுத்தினார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, பாண்டிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட செம்பிரசேரியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன், நண்பர்களுடன் பள்ளிக்கு சுற்றுலா சென்ற போது நிபா வைரஸ் தாக்கியிருக்கலாம் என, முதற்கட்ட தகவல்கள் கூறுகிறது. ஜூலை 15 அன்று அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது. ஜூலை 20 அன்று அதிகாரப்பூர்வமாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்பு பட்டியலில் உள்ள அனைத்து நபர்களும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
பெரிந்தல்மன்னாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு கோழிக்கோடு ஆய்வகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது முதற்கட்டமாக பரிசோதனை செய்யப்பட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் சனிக்கிழமை (ஜூலை 20) தெரிவித்தார். பாண்டிக்காடு, அனக்காயம் ஊராட்சிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது, 246 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர். 63 பேர் அதிக ஆபத்துள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து நாட்களுக்கு முன்பு குழந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது.
காய்ச்சல் நீடித்ததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பெரிந்தல்மன்னாவில் உள்ள மௌலானா மருத்துவமனைக்கும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் கோழிக்கோடு தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். தற்போது, குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.