இந்தியாவில்  கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா பரவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 23,452 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 723 ஆக அதிகரித்திருக்கிறது.

மொத்தம் 4,814 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். 17,915 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணம் அடைந்தவர்களின் விகிதம் 20.57 ஆக இருக்கிறது. தற்போது கொரோனா பரவல் 2 மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் 7.5 லிருந்து 10 நாட்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பரவல் வேகம் கணிசமாக குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதேபோன்று நாட்டில் கடந்த 14 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மத்திய அரசின் ஊரடங்கு நடவடிக்கையால் கொரோனா பரவல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவின் திட்டக்குழுவான நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே. பால் கூறுகையில், 'இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைந்திருப்பதை புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன. ஊரடங்கை ஏற்படுத்தாதிருந்தால் இன்றைக்கு குறைந்தது 73 ஆயிரம் பேருக்காவது கொரோனா பாதிப்பு இருந்திருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த திங்களன்று கொரோனா பரவல் 2 மடங்காக அதிகரிக்கும் வேகம் 3.4-ல் இருந்து 7.5 நாட்களாக குறைந்திருக்கிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. கொரோனா இரு மடங்காக அதிகரிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள்தான் அதன் பரவுதல் வேகத்தை அளவிடும் கருவியாகும். இருமடங்காக அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் கொரோனாவின் வேகம் குறைந்து விட்டது என்று அர்த்தம்’’ என அவர் தெரிவித்தார்.