பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்ஹோத்ரா என்கிற யூடியூபர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு யூடியூபர் கைதாகி இருக்கிறார்.

YouTuber Jasbir Singh Arrested : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறப்படும் மற்றொரு இந்திய யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்பவரே கைது செய்யப்பட்டவர். ஜான் மஹால் என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், பாகிஸ்தான் தூதரக அதிகாரி டானிஷ் மற்றும் முன்னதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று முறை பாகிஸ்தானுக்குச் சென்ற இவர், டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின விழாவிலும் கலந்து கொண்டார். ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பின்னர், ஜஸ்பீர் ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அவர் 2020, 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார், மேலும் அவரது மின்னணு சாதனங்களில் பல பாகிஸ்தான் அடிப்படையிலான எண்கள் இருந்துள்ளன. அவை இப்போது விரிவான தடயவியல் ஆய்வில் உள்ளன.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் கைது

ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பிறகு, ஜஸ்பீர் இந்த PIOகளுடனான தனது தொடர்புகளின் அனைத்து தடயங்களையும் அழிக்க முயன்றிருக்கிறார். SSOC, மொஹாலியில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதாக என்பதை பற்றியும் உளவு-பயங்கரவாத வலையமைப்பை அகற்றவும், அனைத்து ஒத்துழைப்பாளர்களையும் அடையாளம் காணவும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

நேற்று பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறப்படும் ககன்தீப் சிங் என்பவர் தந்தரனில் கைது செய்யப்பட்டார். ஆபரேஷன் சிந்துரி சமயத்தில் ராணுவ நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு கசியவிட்டதாகக் கூறப்படுகிறது.

20க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளுடன் ககன்தீப் தொடர்பு வைத்திருந்ததாகவும், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததற்காகப் பணம் பெற்றதாகவும் பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தெரிவித்தார். பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர் கோபால் சிங் சவுலவுடனும் ககன்தீப் தொடர்பு வைத்திருந்ததாகவும் டி.ஜி.பி. தெரிவித்தார்.