ஆடுகளைக் காப்பாற்ற புலியோடு போராடிய இளம் பெண்ணின் துணிச்சலை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் சகோலி அருகே உஸ்கான் கிராமத்தில் வசிப்பவர் ரூபாலி மெஸ்ராம் (23). இவரது தாயார் ஜீஜா பாய். இவர்கள் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். 

கடந்த 29 ஆம் தேதி அன்று இரவு தனது வீட்டின் முன்பு ஆடுகளைக் கட்டிவிட்டு ரூபாலி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு வந்த ரூபாலி, ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிக்குள் ஏதோ ஒரு விலங்கு செல்வதை பார்த்துள்ளார்.

புலி என்பதை அறியாத ரூபாலி, அருகில் இருந்த கம்பை எடுத்து விரட்டியுள்ளார். ஆனால் புலி, ரூபாலி மீது பாய்ந்தது. சத்தம் கேட்ட வந்த ஜிஜாபாய், ரூபாலியை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்துவிட்டார். இவர்கள் இருவரையும் புலி தாக்கியுள்ளது. மேலும் ஆடு ஒன்றையும் புலி கவ்விக் கொண்டு சென்று
விட்டது.

புலி தாக்கியதில், ரூபாலிக்கு முகம், இடுப்பு, தொடை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜிஜாபாய்க்கு நெற்றியிலும் தலையிலும், கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

புலியுடன் சண்டையிட்டு காயத்துடன் உயிர் தப்பிய அதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் குறித்து பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். 

புலியுடன் சண்டையிட்ட ரூபாலி, கூறும்போது, எங்கள் கிராமம் அருகே காட்டு மிருகங்களை அடிக்கடி பார்த்தருக்கிறேன். அப்போது கவலைப்படுவேன். ஆனால் அச்சப்பட மாட்டேன். புலி வந்துவிட்டு சென்றதும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் அவர்கள் வருவதற்குள் புலி ஓடி விட்டது என்று
கூறினார்.

ரத்தக் காயங்களுடன் தாயாருடன் ரூபாலி நிற்கும் புகைப்படும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்க்கும் பலர், இவர்கள் வீரப்பெண்மணிகள்தான் என்று கூறி வருகின்றனர்.

புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீர தமிழச்சி பற்றி நாம் தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். இந்த துணிச்சல் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் உரித்தான ஒன்றுதான் என்பதை இந்தப் பெண் உணர்த்தியுள்ளார்.