இந்திய ஞானம் மனித குலத்திற்கு நல்லது செய்துள்ளது : முஸ்லிம் உலக லீக் பொதுச்செயலாளர் பாராட்டு
உலகிற்கு இந்தியா ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது. இந்திய ஞானம் மனித குலத்திற்கு நல்லது செய்துள்ளது என்று முஸ்லிம் உலக லீக் பொதுச்செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.

மக்காவை தளமாகக் கொண்ட முஸ்லிம் உலக லீக்கின் (MWL) பொதுச்செயலாளர் டாக்டர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா, இந்தியாவின் நீண்ட வரலாறு மற்றும் பன்முகத்தன்மையை பாராட்டி உள்ளார். இந்து பெரும்பான்மை நாடாக இருந்தாலும் இந்தியா மதச்சார்பற்ற அரசியலமைப்பை கொண்டுள்ளது என்பது பாராட்ட வேண்டிய விஷயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குஸ்ரோ அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்ற புத்திஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் மதத் தலைவர்களின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் கலந்து கொண்டார். உலகின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் எதிர்மறையான போக்குகளைப் பற்றி பேசிய டாக்டர் அல்-இசா "உலகிற்கு இந்தியா ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது. இந்திய ஞானம் மனித குலத்திற்கு நல்லது செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த பல இந்தியர்களைச் சந்தித்து வருவதாகவும், அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கையைக் கண்டதாகவும் அவர் கூறினார். மேலும் “ இந்திய முஸ்லீம் சமூகம் பன்முகத்தன்மை மற்றும் சகவாழ்வுக்கு பங்களிக்கிறது. கலாச்சாரங்களுக்கு இடையே (இந்தியா மற்றும் இஸ்லாம்) தொடர்பை ஏற்படுத்துவதே காலத்தின் தேவை.
மக்காவை தளமாகக் கொண்ட முஸ்லீம் உலக லீக்கின் தலைவர் என்ற முறையில், உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களுடன் தனக்கு கூட்டணி இருக்கிறது. இந்தியாவில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதால், முஸ்லீம் உலக லீக்கில் பல இந்து அமைப்புகளுடன் ஒத்துழைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்திய ஆன்மீகத் தலைவர்களான சத்குரு (ஜக்கி) மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோருடன் தனக்கு ஆழ்ந்த தொடர்பு இருப்பதாக கூறிய அவர், பல இந்து தலைவர்களுடன் எங்களுக்கு பல பொதுவான மதிப்புகள் உள்ளன, வேறுபாடுகளை நாங்கள் மதிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கலாச்சாரங்களின் பன்முகத்தன்மை மற்றும் சகவாழ்வின் இந்தியாவின் மாதிரியானது உலகிற்கு முன்னோக்கி செல்லும் வழி என்று டாக்டர் அல்-இசா கூறினார். இந்தியாவின் பன்முகத்தன்மை ஒரு பெரிய சொத்து, அதை ஒருபோதும் பயன்படுத்தாமல் விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் “ சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு என்பது மாநாடுகளில் மட்டும் பேசப்பட வேண்டிய ஒன்றல்ல, அவை களத்தில் செயல்படுத்தப்பட்டு நம் வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். உலகில் அதிகரித்து வரும் எதிர்மறையான போக்குகளை நான் கவனித்து வருகிறேன். இவை நம்பிக்கைகளின் ஒற்றுமையுடன் கையாளப்பட வேண்டும். பொது மதிப்புகளை வலுப்படுத்த நாம் உழைக்க வேண்டும்.
இந்த எதிர்மறையான போக்குகள் மற்றும் நாகரீகங்களின் மோதலின் அழிவு நாள் கணிப்புகளை எதிர்கொள்வதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை நாகரிகங்களின் கூட்டணி மற்றும் கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே பாலங்கள் கட்டுதல் போன்ற முன்முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவில், அரசியலமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க பன்முகத்தன்மை ஒரு சிறந்த வழியாகும் என்று கூறினார்.
இஸ்லாத்தின் மிதவாத முகத்தை ஊக்குவிப்பவராகக் கருதப்படும் டாக்டர் இசா, உலகம் முழுவதும் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதில் சமூகத் தலைவர்களின் பங்கு உள்ளது என்று தெரிவித்தார். மேலும் "குழந்தைகளுக்கு ஆரம்பகால வாழ்க்கையிலிருந்து இதைக் கற்பிக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நவீன உலகில், நமது விதியை வடிவமைக்க எங்களுக்கு கூட்டணிகள் தேவை, மேலும் சிறந்த எதிர்காலத்திற்காக நமது பங்கைச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இஸ்லாத்தை விளக்கிய அவர், இஸ்லாமிய கலாச்சாரம் அன்பு, மற்றும் உரையாடலுக்கு திறந்திருக்கும் என்றார். முஸ்லிம்கள் சகவாழ்வை பாராட்டுவது மட்டுமன்றி அது அவர்களின் மதக் கடமையும் கூட. இஸ்லாம் சகிப்புத்தன்மை மட்டுமல்ல, மற்றவர்களை மன்னிப்பதும் ஆகும். நாம் யாருடன் வேறுபடுகிறோமோ அவருக்கு மரியாதை காட்ட இஸ்லாம் கற்றுக்கொடுக்கிறது. உலகில் உள்ள 1.8 பில்லியன் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் உண்மையான செய்தியின் பிரதிநிதிகளாக மாற வேண்டும் என்றும் கூறினார்.
முஸ்லீம் உலக லீக்கின் இந்தியாவுடனான தொடர்பைப் பற்றி அவர் பேசுகையில், " இந்தியாவுடனான எங்கள் கூட்டு முழு உலகிற்கும் ஒரு செய்தியாகும். இந்தியாவில் உள்ள அனைவரின் வருகைக்கும் இந்தியா திறந்திருக்கிறது என்பது உலகிற்கு ஒரு செய்தி என்று தெரிவித்தார்.