உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 90,927 மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 53,946 பேர் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,872 பேர் பலியாகி இருக்கின்றனர். நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மிக அதிகபட்சமாக 4,987 பேர் பாதிக்கப்பட்டு 120 பேர் பலியாகியுள்ளனர். நாட்டின் அனைத்தும் மாநிலங்களில் இருந்தும்  34,109 மக்கள் கொரோனா நோயில் இருந்து பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ராணுவ வீரர் ஒருவர் கொரோனா நோய்க்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த அந்த வீரர் அசாமில் பணி புரிந்து வந்தார். ஏற்கனவே அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக டெல்லியில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் கடந்த ஆண்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர் மரணமடைந்தார். அரசு மரியாதையுடன் நடந்த ராணுவ வீரரின் உடல் அடக்கத்தில் அவரது மனைவி பங்கேற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் தற்போது வரை 9,333 பேருக்கு தொற்று ஏற்பட்டு 129 பலியாகி உள்ளனர். நாகலாந்தில் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.