குடியுரிமை சட்ட விவகாரத்தில் முஸ்லிம் மக்களிடம் எதிர்கட்சிகள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். மக்களை ஏமாற்ற தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என டெல்லி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். 

டெல்லியில் மிக குறைந்த வருவாய் உள்ள, ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இதில் 1,797 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நில உரிமை ஆவணம் (பட்டா ) வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். 

பிரதமர் மோடி பேசுகையில்;- பொய்யான வாக்குறுதியால் டெல்லி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாங்கள் தற்போது டெல்லியில், 40 லட்சம் மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கி உள்ளோம். ஏழைகளை மையமாக வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். மற்ற கட்சிகள் வெற்று வாக்குறுதிகளை அளித்துக் கொண்டு இருக்கும்போது வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. டெல்லியில் 17,000க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவு படுத்த ஆம் ஆத்மி அரசு முட்டுக்கட்டை போட்டது. டெல்லி மக்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது இன்னும் கனவாகவே உள்ளது.

டெல்லியில் மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் தவறான வீடியோக்களை பரப்பி வருவதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய நாடாளுமன்றத்தின் கவுரவத்தை மதிக்க வேண்டும். மேலும், நாங்கள் மக்களுக்காகவே உழைக்கிறோமே தவிர, குறிப்பிட்ட மதத்திற்காக அல்ல. சில அரசியல் கட்சிகள் குடியுரிமை சட்டம் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றனர். அனைவரின் வளர்ச்சிக்காகவே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் ஒற்றுமையில் வேற்றுமை என்பது மந்திரம். ஆனால் எதிர்கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக சதி செய்கிறது.

மேலும், அவர் பேசுகையில், நாங்கள் இயற்றிய குடியுரிமை சட்டம் உண்மையானது நியாயமானது. நடுநிலையானது. ஆனால், எதிர்கட்சிகள் வன்முறையை தூண்டி அரசு சொத்துக்கள் ரயில், வாகனங்களை தீ வைக்கின்றனர். என்னுடைய உருவபொம்மையை எரியுங்கள், பொது சொத்துக்களை எரிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். போலீசாரை ஏன் தாக்க வேண்டும்? போலீசார் யாருக்கும் எதிரி அல்ல. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், 33 ஆயிரம் போலீசார் உயிரிழந்துள்ளனர். ஆனால், இன்று போலீசாரை கொடூரமாக தாக்குகிறீர்கள். உங்களுக்கு, பிரச்சனை என வரும் போது, போலீசார் உங்களின் மதம், ஜாதி என கேட்பது இல்லை. ஆனால், உரிய நேரத்தில் வந்து உதவி செய்கின்றனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.