பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானி அபினந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த மிக் 21 ரகத்தை சேர்ந்த இரு போர் விமானங்களை தங்களது ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானிகளை கைது செய்ததாகவும் அறிவித்த பாகிஸ்தான் பிடிபட்ட விமானியின் புகைப்படங்களையும் வீடியோ காட்சியையும் வெளியிட்டது. 

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் இருந்து தப்பிய இந்திய விமானி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். கைதான விமானி அபிநந்தன் பெயர் மற்றும் விமானப்படையில் தனது அடையாள எண் ஆகியவற்றை வீடியோவுடன் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபினந்தன் சென்னையை சேர்ந்தவர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. விமானி அபினந்தன் சென்னை, தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றவர். 2004ம் ஆண்டு முதல் இந்த இந்திய விமானியாக பணியாற்றி வருகிறார். இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் சென்னையில் இஅவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவரது தந்தை வர்தமான் விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணியாற்றியவர். அபினந்தன் அமரவாதிநகரில் உள்ள சாயிநிக் பள்ளியில் பயின்றவர். சென்னை, சேலையூரை அடுத்த  மாடம்பாக்கம் பகுதியில் அபினந்தனின் பெற்றோரும், குடும்பத்தினரும், உறவினர்களும் வசித்து வருகின்றனர். அபினந்தன் தற்போது விமானப்படையில் விங் கமெண்டராக பணியாற்றி வருகிறார்.

 

இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் வேகமாக ஒரு வீடியோ பரவிவருகிது. அதில், கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறம் கட்டப்பட்ட நபர் ஒருவர், எனது பெயர் அபினந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. எனது சர்வீஸ் எண்  27981, எனது மதம் இந்து என்று கூறுகிறார். மேலும், சில தகவல்களைக்கோர இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல அனுமதியில்லை என்கிறார். நான் பாகிஸ்தான் ராணுவத்திடமா இருக்கிறேன் என்றும் விசாரிக்கிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் அபினந்தன் சிக்கியதை இந்திய தரப்பும் உறுதி செய்துள்ளது.