எல்லையில் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து, எந்த நேரமும் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய விமானப்படை உஷார் நிலையில் உள்ளது. 

கடந்த 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்களில் தகவல் தெரிவித்துள்ளனர். இதில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவம், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய கடற்படை, விமானப்படை ஆகியவை உஷார் படுத்தப்பட்டுள்ளன. இதனால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.