உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனின் கார்கிவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. உக்ரைன் அரசு ஐரோப்பாவிற்கு நெருக்கமாகவும், நேட்டோ படைகளுக்கு நெருக்கமாகவும் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்கி வருகிறது. முக்கியமாக மேற்கு உக்ரைன் பரப்பை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில்தான் ரஷ்யா இதுவரை கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது. அங்கு கடந்த 6 நாட்களாக கடுமையான ஏவுகணை தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்களை நடத்தி உள்ளது.

உக்ரைனுக்கு மேற்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை குறைந்தது 14 குழந்தைகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலால் கடுமையான பொருளாதாரத் தடைகளையும், உலகளாவிய கண்டனங்களையும் ரஷ்யா எதிர்கொண்டுவருகிறது. ஆனால், இலக்குகளை அடையும் வரை உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடரப் போவதாக ரஷ்யா தெரிவித்திருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். நேற்றைய தினம் பிரதமர் மோடி ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, உக்ரைனில் நிலவும் மோசமான நிலைமை குறித்து பிரதமர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயலவேண்டும் என இந்தியாவின் வேண்டுகோளை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கார்கிவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை எச்சரிக்கும் விதமாக இந்தியர்கள் அனைவரும் உடனடியாக கார்கிவிலிருந்து உக்ரைன் நேரப்படி மாலை 6 மணிக்குள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
