ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி: இந்திய தூதரகம் அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!
ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கி வரும் நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் அவரசகால உதவி எண்களை வெளியிட்டுள்ளது
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குக் கடலோரம் உள்ள அனைத்து ஜப்பானிய நகரங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 5 முதல் 7 மீட்டர் அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி தாக்கி வரும் நிலையில், அங்குள்ள இந்திய தூதரகம் அவரசகால உதவி எண்களை வெளியிட்டுள்ளது. ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள், இமெயில் ஐடி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் அந்த எண்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜப்பானில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊருக்குள் கடல் நீர் வர தொடங்கியுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள காஷிவாசாகி-கரிவா அணுமின் நிலையத்திற்கு அருகில் 0.4 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கியதாக பதிவாகியுள்ளது. சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.