நெருப்புடா... நெருங்குடா பாப்போம்! பயிற்சி முடிந்து ராணுவப் படைகளில் இணையும் 19,000 அக்னி வீரர்கள்!
அக்னிவீர் திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்திருக்கும் 19,000க்கும் மேற்பட்ட அக்னி வீரர்கள், அடுத்த வாரம் தங்கள் படைப்பிரிவுகளில் சேருவார்கள்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பணியில் சேர்க்கப்பட்ட வீரர்களின் முதல் இரண்டு பேட்ச் மூலம் இந்திய ராணுவத்தில் தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பேட்ச்களில் தேர்வான அக்னி வீரர்களில் ஐந்து சதவீதம் பேர் டிப்ளோமா படித்தவர்கள் அல்லது தொழில்துறை சான்றிதழ் பெற்றவர்கள். 15 சதவீதம் பேர் பட்டதாரிகள்.
சமீபத்தில் பயிற்சியை முடித்திருக்கும் 19,000க்கும் மேற்பட்ட அக்னி வீரர்கள், அடுத்த வாரம் தங்கள் படைப்பிரிவுகளில் சேருவார்கள். மேலும் 20,000 பேர் செப்டம்பரில் பயிற்சியை முடித்து ஓரிரு மாதங்களில் தங்கள் பிரிவுகளில் சேருவார்கள். இரண்டு பேட்ச்களிலும் சேர்த்து 110 பி.டெக் பட்டதாரிகள் அக்னிவீரர்களாகப் படையில் சேரவுள்ளனர்.
இந்த நடவடிக்கை ராணுவத்தின் மாற்றம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு உதவும் என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஏசியாநெட்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தொழில்நுட்ப ரீதியாக திறமையான நபர்களின் சேர்க்கை நவீன போர் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்க உதவும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராணுவத்தின் நவீன தொழில்நுட்பத் திறன்:
தற்போது, அதிநவீன ஆயுதங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்பங்களுடன் கூடிய உபகரணங்களைக் கையாளும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், "இந்த ஆட்சேர்ப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களுடன், ராணுவத்தில் நடந்துவரும் எதிர்கால தொழில்நுட்ப முயற்சிகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்று ராணுவ வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
அக்னி வீரர்களின் உடல் தரம் இத்திட்டத்திற்கு முன் ராணுவ பயிற்சி பெற்ற வீரர்களுக்கு இணையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். முதல் இரண்டு அக்னிவீர் பேட்ச்களின் செயல்பாடு இந்திய ராணுவத்தில் அதிக அளவிலான இளைஞர்கள் சேரவும், தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்கவும் ஊக்கம் அளிப்பதாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.
இத்திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் அக்னிவீரர்களை ராணுவம் பணியில் அமர்த்தும். இதனால் வரும் காலத்தில், ராணுவப் பிரிவுகளின் உள்ள வீரர்கள் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் கருதுகிறது.
நிலவை சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும் சந்திரயான்-3! 70 கி.மீ தூரத்தில் எப்படி இருக்கு பாருங்க!
அக்னிபாத் திட்டம்:
அக்னிபாத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு, 16 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியில் சேர்க்கப்பட்டது. அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. புதிய அக்னிபாத் திட்டத்தின் கீழ், 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்க்கப்படுவார்கள். 17.5 ஆண்டுகள் முதல் 21 ஆண்டுகள் வரையான வயது வரம்புக்குள் உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.
கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி, சிப்பாய்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படையினர் உள்ளிட்ட 'மற்ற ரேங்க்'களுக்கு பணியாளர்களை நியமிக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. அறிவிப்பு வெளியான உடனேயே, இந்தத் திட்டம் நாடு முழுவதும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.
வெளியேறிய பின் கிடைக்கும் பலன்கள்
இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்றி வெளியேறியதும் பல்வேறு பலன்கள் கிடைக்கும். வருமான வரி விலக்குடன் கூடிய ரூ.11.71 லட்சம் 'சேவா நிதி' தொகை நான்கு ஆண்டுகள் ராணுவ சேவை நிறைவடைந்ததும் அக்னி வீரர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே துறைகளில் 10 சதவீத பணியிடங்கள் அக்னி வீரர்களாக ப் பணிபுரிந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தனியார் துறையிலும் அக்னி வீரர்களாக சேவையாற்றியவர்களுக்கு பல்வேறு சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நிலவை சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும் சந்திரயான்-3! 70 கி.மீ தூரத்தில் எப்படி இருக்கு பாருங்க!