நிலவை சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும் சந்திரயான்-3! 70 கி.மீ தூரத்தில் எப்படி இருக்கு பாருங்க!
சந்திரயான்-3 விண்கலம் சுமார் 70 கிமீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படங்களை செவ்வாய்க்கிழமை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் சுமார் 70 கிமீ உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் படங்களை செவ்வாய்க்கிழமை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் ஆகஸ்ட் 19 அன்று விக்ரம் லேண்டரில் உள்ள எல்பிடிசி (LPDC) கேமரா மூலம் எடுக்கப்பட்டவை.
ஆகஸ்ட் 20ஆம் தேதி லேண்டரில் உள்ள 4வது கேமரா மூலம் எடுக்கப்பட்ட கேமரா எடுத்த நிலவுக்கு மிக நெருக்கமான படங்களையும் வெளியிட்டுள்ளது. பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், தற்போது தரையிறங்குவதற்கு முந்தைய வழக்கமான சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
நாளை மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 தரையிறங்கும் நிகழ்வு நாளை மாலை 5.20 மணி முதல் இணையத்திலும் டிடி நேஷனல் சேனலிலும் நேரடி ஒளிப்பரப்பு செய்ய இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் சந்தியான்-3 லேண்டர் நாளை (புதன்கிழமை) மென்மையாகத் தரையிறக்க திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பலவிதமான படங்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
சந்திரயான்-3 எதற்காக இத்தனை படங்களை எடுக்கிறது?
LPDC கேமரா மூலம் எடுக்கப்படும் படங்கள் லேண்டர் தான் இருக்கும் இடத்தை நிர்ணயம் செய்ய உதவுகிறது. இந்தக் கேமராவில் எடுக்கப்படும் படங்கள் லேண்டரில் ஏற்கெனவே உள்ள நிலவின் படங்களுடன் பொருத்தி பார்க்கவும் பயன்படும் என இஸ்ரோ விளக்கியுள்ளது.
லேண்டரில் உள்ள எல்ஹெச்டிஏசி (LHDAC) கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்களையும் கடந்த திங்கட்கிழமை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி தரையிறங்க சாதகமான சூழல் இல்லாவிட்டால், தரையிறங்கும் முயற்சி நிலைமை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் உயர் அதிகாரி நிலேஷ் எம். தேசாய் தெரிவித்துள்ளார்.
"ஆகஸ்ட் 23 ஆம் தேதி, சந்திரயான்-3 நிலவில் தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, லேண்டர் தொகுதியின் ஆரோக்கியம் மற்றும் நிலவில் உள்ள நிலைமைகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் தரையிறக்குவது சரியானதா இல்லையா என்பது குறித்து முடிவெடுப்போம்" என இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் எம். தேசாய் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அவர், "தேவையான எந்த அம்சம் சாதகமாக இல்லை என்றாலும் சந்திரனில் தரையிறங்குவது ஆகஸ்ட் 27ஆம் தேதி தள்ளிப்போகும்" என்று கூறியுள்ளார்.