பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாலகோட்டில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தகவல் உண்மையில்லை. அந்தப்பகுதியில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்பது செயற்கை கோள் அனுப்பிய படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. பதிலடி கொடுக்க வந்த பாகிஸ்தான் ராணுவத்தை துரத்தியடித்தபோது  இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

இந்நிலையில்,  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்திய பிரதமர் மோடியோ பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் முகாமில் அழிக்கப்பட்டதாக கூறி வருகிறார். 

இந்நிலையில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தனியார் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. அதில் பாலகோட் அருகே இஸ்லாமிய மத பயிற்சி பள்ளியான மதரசா அமைந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாலகோட்டில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் இந்த செயற்கை கோள் படங்கள் அவரின் கூற்றை பொய்யாக்குவாதாக உள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்றும், அங்குள்ள மதரசா பள்ளியும் எந்த வித சேதமும் அடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மதரசா பள்ளியில் மொத்தம் 6 கட்டிடங்களும் நல்ல நிலையில் உள்ளன என்றும் மரங்கள் முறியாமல் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்தி வருகிறது என கூறப்படுகிறது. இந்த செயற்கைகோள் படம் இந்திய தாக்குதல் தொடர்பான சந்தேகத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தி உள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.