சிங்கப்பூரில் நடந்த 4-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தைக் கைப்பற்றியது. 

இறுதிஆட்டத்தில் வலிமையான சீனாவை 1-2 என்ற கோல் கணக்கில் வெளியேற்றி கோப்பையை வென்று அசத்தினர் இந்திய மகளிர் அணியினர்.

இதன் மூலம் ஆடவர் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தை நடப்பு ஆண்டில் தட்டிச் சென்றுள்ளது.

சிங்கபப்பூரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா அணியை எதிர்கொண்டது சீனா அணி. பரபரப்பான இந்த போட்டியில் முதல் கால்பகுதியில், இந்திய அணி வீராங்கனை தீபா கிரேஸ் எக்கா 13-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் 1-0 என்று முன்னிலை பெற்றது.

2-வது கால்பகுதியில் இரு அணியினரும் கோல் அடிக்காததையடுத்து, இந்திய அணி தொடர்ந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 

3-வது கால்பகுதியில் இந்திய வீராங்கனைகள் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி சீன வீராங்கனைகளுக்கு நெருக்கடி கொடுத்தனர்.  இருப்பினும் 44-வது நிமிடத்தில் சீன அணியின் ஹாங் மெங்லிங் கோல் அடித்து  சமன் செய்தார். இதனால், 1-1 என்று இரு அணிகளும்சமநிலை பெற்றன. 

4-வது மற்றும் கடைசி கால்பகுதியில், இந்திய மகளிர் பம்பரமாக பந்தை கடத்தி, சீன வீராங்கனைகளுக்கு போக்கு காட்டினர். 60-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகா கோல் அடித்து அணியை 2-1 என்று முன்னெடுத்தார். இந்த கோலை சமன்செய்ய சீன அணி கடைசிவரை முயன்றும் பயனில்லை. இறுதியில் சீன அணியை 2-1 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தோற்கடித்தது.

இதற்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் 2-ம் இடம் பெற்றதே இந்திய அணியின் சிறப்பான பங்களி்ப்பாகும். ஆனால், இந்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த முதல் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.