இந்தியா அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என மவுனத்தை கலைத்து பிரதமர் மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதன் தொடக்கத்தில் லடாக் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தினர் உடனான தாக்குதலில் வீர மரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதல்வர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி பேசுகையில்;- இந்தியா எந்த நாட்டின் மீதும் வன்முறையில் ஈடுபடுவது கிடையாது. அதேநேரத்தில் யாரோனும் இந்தியா மீது அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டால் இந்தியா தக்க பதிலடி கொடுக்க தயங்காது பதிலடி கொடுக்கக்கூடிய சக்தி இந்தியாவிடம் இருக்கிறது என்று எச்சரித்தார். 

எல்லையில் உயிரிழந்த இந்திய வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்று கூறியுள்ளார்.