ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கைப்படி, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தின் ஒட்டுமொத்த அதிகரிப்பில் இந்தியா உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நூற்றாண்டிற்குள் புவியின் சராசரி வெப்பநிலை 2.8°C வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கிறது.

பசுமை இல்ல வாயுக்கள் (GHG) வெளியேற்றத்தில் இந்தியா உலக அளவில் முதலிடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. கரியமில வாயுக்கள் அதிகரித்து வருவதால் காலநிலை அபாயங்கள் மற்றும் சேதங்கள் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பு

மொத்த பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தில் மிக அதிக ஒட்டுமொத்த அதிகரிப்பு (Highest Absolute Increase) இந்தியாவில் காணப்பட்டதாக ஐ.நா. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில் கரியமில வாயு அதிகரிப்பு அதிகமாக உள்ளது.

இந்தோனேசியா வேகமான ஒட்டுமொத்த அதிகரிப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் நீங்கலாக மற்ற G20 உறுப்பு நாடுகளில் கார்பன் உமிழ்வு 2024 இல் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலகளாவிய கார்பன் உமிழ்வில் 77 சதவீதம் ஆகும்.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் ஆறு பெரிய நாடுகளில் கரியமில வாயு உமிழ்வு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டுமே 2024ஆம் ஆண்டில் கரியமில வாயு உமிழ்வு குறைந்துள்ளது.

பாரிஸ் இலக்கைத் தாண்டும் புவி வெப்பம்

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நாடுகள் அளித்த புதிய காலநிலை உறுதிமொழிகளை (NDCs) ஆய்வு செய்ததில், இந்த நூற்றாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் உலகளாவிய வெப்பநிலை உயர்வு மிகக் குறைவாகவே சரிந்துள்ளதாக UNEP அறிக்கை தெரிவிக்கிறது.

1.5 டிகிரி செல்சியஸ் என்ற பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கைப் பூர்த்தி செய்வதில் இருந்து உலகம் வெகுதூரம் விலகிச் செல்கிறது. தற்போதைய திட்டங்களின்படி, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவியின் சராசரி வெப்பநிலை 2.8°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உறுதிமொழிகளையும் (NDCs) முழுமையாகச் செயல்படுத்தினாலும், வெப்பநிலை உயர்வு 2.3°C முதல் 2.5°C வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீறல் தவிர்க்க முடியாதது

உலகளாவிய வெப்பநிலை உயர்வு 1.5 டிகிரி செல்சியஸை தற்காலிகமாகவாவது மீறும் என்பது இந்த அறிக்கை மூலம் உறுதியாகிறது. இந்த நிலை பெரும்பாலும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் (Next Decade) நிகழும் அபாயம் உள்ளது.

இது குறித்து கவலை தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரஸ், "1.5 டிகிரி செல்சியஸுக்கு மேலான தற்காலிக மீறல் (temporary overshoot) இப்போது தவிர்க்க முடியாதது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் இது சோர்வடையும் நேரம் அல்ல, இது துரிதமாக செயல்படுவதற்கான நேரம். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்பதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும். இந்த இலக்கு இன்னும் எட்டக்கூடியதே," என்று வலியுறுத்தியுள்ளார்.