காஷ்மீரின் புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய தீவிரவாதிகள் முகாம் மீது 1,000 கிலோ அளவிலான குண்டுகளை மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் வீசி இந்திய விமானப்படை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் இன்று புகுந்து உள்ளது. காஷ்மீரில் ராஜூரி எல்லைக்குள் இந்த விமானங்கள் புகுந்து இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சொந்தமான F -16 ரக போர் விமானங்கள் இந்த செயலை செய்துள்ளது. மொத்தம் 2-3 விமானங்கள் உள்ளே புகுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 நிமிடங்கள் அவை இந்திய எல்லைக்குள் இருந்தது என்றும் கூறுகிறார்கள். இதையடுத்து அந்த பகுதிக்கு இந்திய போர் விமானங்கள் வேகமாக சென்று இருக்கிறது. 

ஆனால் இந்திய விமானங்கள் அங்கு செல்லும் முன் காஷ்மீரில் ராஜூரி விமானப்படை கட்டிடம் அருகே பாகிஸ்தான் விமானம் குண்டு வீசியது. இந்த குண்டு விமானப்படை கட்டிடம் அருகேயே விழுந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிர்சேதம் எதுவும் நடக்கவில்லை என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில் இந்திய  எல்லைக்குள்  எல்லைக்குள் நுழைந்த எப்-16 ரக விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்ததால் பதிலடி கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றது. இந்த அதிக வசதிகள் கொண்ட F16 ரக போர் விமானம் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.