S Jaishankar: 2030க்குள் இந்தியப் பொருளாதாரம் உலகின் 3வது இடத்தைப் பிடிக்கும்: அமைச்சர் ஜெய்சங்கர்
2030ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் சனிக்கிழமை மாலை ‘துக்ளக்’ பத்திரிகையின் 53வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் பொருளாதார நிலை, வெளியுறவுக் கொள்கை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா கையாண்ட நடவடிக்கைகள், உலக நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு, வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் என பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாகப் பேசினார்.
“உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது. வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உறுதியாக இந்தியா 3வது இடத்துக்கு உயரும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதற்கு ஏற்ப வேகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
Nitin Gadkari: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ‘தாவூத்’ கொலை மிரட்டல்! ரூ.100 கோடி கேட்டு பேரம்!
“இந்தியாவில் இருந்து 3.2 கோடி மக்கள் வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எடுத்துக்காட்டாக, உக்ரைன் நாட்டில் ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதும் இந்தியர்களை அங்கிருந்து மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தன” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உலக அரங்கில் இந்தியாவின் குரல் செல்வாக்கு மிக்கதாக உள்ளது. இந்தியாவின் பரிந்துரையின் பேரில்தான் 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது” எனவும் ஜெய்சங்கர் கூறினார்.