இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,927லிருந்து 96,169ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தாளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நோயின் தாக்கம் சற்றும் குறையவில்லை. ஆகையால், 4வது முறையாக ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,169ஆக அதிகரித்துள்ளது.  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,872லிருந்து 3,029ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 36,824ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,242 பேரருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.  மகாராஷ்டிராவில் 33053 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1198 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 11379 பேருக்கும், தமிழகத்தில் 11224 பேருக்கும், டெல்லியில் 10054 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.