கோவாவில் நாளை தொடங்கும் “பிரிக்ஸ்” நாடுகள் உச்சி மாநாட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக தீவிரவாத பிரச்சினை, எல்லை தாண்டிய தீவிரவாதம் ஆகிய பிரச்சினைகளை கிளப்பி, சர்வதேச அளவில் அந்நாட்டை தனிமைப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா, பிரேசில் அதிபர் ஆகியோரிடம் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள், தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்துவரும் அந்நாட்டின் போக்கு குறித்து பிரதமர் மோடி எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் உரி ராணுவமுகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய ஒருமாதத்துக்குள் இந்த பிரிக்ஸ் மாநாடு, பிம்ஸ்டெக் மாநாடுகள் நடக்கின்றன.
இதனால் இந்த மாநாட்டில், தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் நாடுகள், தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதல்களை எப்படி கையாள்வது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
குறிப்பாக சமீபத்தில் நடந்து முடிந்த ஜி20 மாநாடு மற்றும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் ஆகியவற்றிலும் பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாத செயல்கள் குறித்து இந்தியா வலியுறுத்தியது.
ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தெற்கு ஆசியாவில் ஒரு நாடு தீவிரவாதத்தை தொடர்ந்து பரப்பி, வளர்த்த வருகிறது என மறைமுகமாக பாகிஸ்தான் குற்றம் சாட்டினார். அதேபோல, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் உண்மையில் உதாரணம் என நேரடியாக குற்றம்சாட்டினார். ஆதலால், இந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க வரும் பூடான், வங்காஙதேசம், பூடான், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர்களிடத்திலும் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான் குறித்தும், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்தும் இந்தியா எழுப்பும் என தெரிகிறது.
