இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, சண்டிகர் மற்றும் ஸ்ரீநகர் உட்பட 24 விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்ததால், இந்தியாவில் 24 விமான நிலையங்களில் பொது விமானச் சேவைகள் நிறுத்திப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் சண்டிகர், ஸ்ரீநகர், ஜெய்சால்மர் மற்றும் சிம்லா ஆகியவை அடங்கும்.
ஜம்மு, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பல இந்திய நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடந்த முயன்றதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மின்வெட்டு, சைரன் சத்தம்:
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக பல நகரங்களில் மின்வெட்டுகள் ஏற்பட்டன. வான்வழித் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன்கள் ஒலித்தன. இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடந்த ஐபிஎல் போட்டி பாதியைலி் ரத்து செய்யப்பட்டது.
ஜம்முவின் மீது சந்தேகத்திற்குரிய ட்ரோன்கள் ஊடுருவியதை இந்திய பாதுகாப்புப் படைகள் தடுத்ததில் இருந்து இந்தச் சம்பவங்கள் தொடங்கியன. தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் முக்கியப் பகுதிகள் மற்றும் மேற்கு எல்லையில் உள்ள பிற இடங்களில் பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்நூர்:
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பதிலடி இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. மறுநாள் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த முயன்று தோற்றுவிட்டது.
மூடப்பட்ட பல விமான நிலையங்கள் விமான சேவை சனிக்கிழமை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. கூடுதல் பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு அனுமதிக்கும் வகையில், செயல்பாட்டு விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் முன்கூட்டியே வர வேண்டும் என்றும் பயணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, விமான நிலையங்கள் உயர்ந்த பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தியுள்ளன. மேலும் பயணிகள் தங்கள் பயணங்களுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று இண்டிகோ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. பயணிகள் திட்டமிட்டதைவிட குறைந்தது மூன்று மணிநேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் மற்றும் அகாசா ஏர் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
விமானச் சேவைகள் பாதிப்பு:
புதன்கிழமை இண்டிகோ 165 விமானங்களை ரத்து செய்தது, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான விமானங்களை ரத்து செய்தன. கூடுதலாக, அமிர்தசரஸுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியாவின் இரண்டு சர்வதேச விமானங்கள், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அமிர்தசரஸ் விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால், டெல்லிக்குத் திருப்பிவிடப்பட்டன.


