இந்த மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்திய வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் வெப்பச்சலனம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் மே மாதத்தில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி டாக்டர் நரேஷ் குமார், “ஏப்ரல் மாதம் முதல் கடந்த சில நாட்கள் வரை, வடமேற்கு இந்தியாவில் மேற்குத் தொந்தரவுகள் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் மழை பெய்தது. இதனால், வெப்பநிலை அதிகமாக இல்லை. ஆனால், மே மாதத்தில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இன்றுகூட பல இடங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.” என்றார்.
தாஜ்மஹாலுக்கு வந்தது போட்டி: ஆக்ராவின் வெள்ளை பளிங்கு மாளிகையில் குவியும் மக்கள்!
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸுக்கு அருகில் உள்ளது. வெப்ப அலையின் நிலைமைகள் உத்தரபிரதேசத்தில் உள்ளதைப் போலவே உள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கலாம். மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில் 4 நாட்களுக்கு மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், இதன் காரணமாக வெப்பநிலை சற்று குறையக்கூடும் எனவும் விஞ்ஞானி நரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, அடுத்த 5 நாட்களில் தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த 5 நாட்களுக்கு வடமேற்கு இந்தியா மற்றும் பீகாரில் கடுமையான வெப்ப அலை நிலைகள் இருக்கும் என்றும், மே 18ஆம் தேதி முதல் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்ப அலை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.