மாலத்தீவில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தியா ரூ.55.28 கோடி மதிப்பிலான 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாலத்தீவுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, அந்நாட்டில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூ.55.28 கோடி மதிப்பிலான 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திட்டது.
இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் (HICDP) மூன்றாம் கட்ட பணிகளுக்காக இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் நடந்த நிகழ்வில் இருநாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது இந்தியா - மாலத்தீவு இடையேயான வலுவான கூட்டாண்மையில் மற்றொரு மைல்கல் என்று மாலத்தீவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமூக மேம்பாட்டுத் திட்டம்:
சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள 13 திட்டங்களும் மொத்தம் 55.28 கோடி ரூபாய் மதிப்பிலானவை. இவை முக்கியமாக மாலத்தீவில் படகு சேவைகளை மேம்படுத்துதல், போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளன.
இது குறித்து மாலத்தீவுக்கான இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “சமூக மேம்பாட்டுக்காக கைகோர்க்கிறோம்” என்றும் இந்தியாவின் மானியத்துடன் மாலத்தீவில் படகு சேவைகளை மேம்படுத்துவதற்காக 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
"மாலத்தீவு மக்களின் உயிர்நாடியாக விளங்கும் கடல்வழி இணைப்பை மேம்படுத்துவதில் மாலத்தீவு அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது" என்றும் அந்தப் பதிவு தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தங்களில் மாலத்தீவு அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் மற்றும் இந்திய அரசின் சார்பில் மாலத்தீவுக்கான இந்தியத் தூதர் ஜி. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். திட்டத்தைச் செயல்படுத்தும் முகமை சார்பில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முகமது அமீன் கையெழுத்திட்டார்.
