இந்தியாவில்  கொரோனா சமூக பரவலாக மாறவில்லை, யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,86,579ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா,  தமிழ்நாடு, டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், சமூக பரவல்  ஏற்பட்டிருக்கிறதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த  சூழலில் நாட்டில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது. 

இதுகுறித்து ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது: இந்தியா அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. அதற்கான சூழல் இல்லை. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் பரவும் வேகமும், பாதிப்பின் அளவும் மிக குறைவாகவே உள்ளது.

15 மாவட்டங்களில் 0.73 சதவீத மக்கள் மட்டுமே கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை பலன் அளித்துள்ளதையே இது காட்டுகிறது. ஊரடங்கால் கொரோனா வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 49.21% ஆக உள்ளது. தற்போது மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.