"இந்தியன் முஜாகிதீன் பெயரிலும், இந்தியா உள்ளது": எதிர்க்கட்சிகளின் கூட்டணியை கலாய்த்த பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளை "திசையற்றவர்கள்" என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கூட்டணியின் புதிய பெயரையும் கேலி செய்தார்.

India is also in the name of Indian Mujahideen": PM Modi attacks opposition alliance

எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பாட்னாவில் நடந்த நிலையில் கடந்த வாரம் பெங்களூரில் 2-வது கூட்டம் நடந்தது. 26 கட்சிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயெரிடப்பட்டது. அதாவது Indian National Developmental Inclusive Alliance இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என்பதன் சுருக்கமே இந்தியா ஆகும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக நாடாளுமன்றக் கட்சியின் வாராந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை விமர்சித்ததாக அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற பெயருக்காக தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ். கிழக்கிந்திய நிறுவனம். இந்தியன் முஜாஹிதீன். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - இவையும் இந்தியா தான். இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துவதால் ஒன்றும் அர்த்தமில்லை" என்று பிரதமர் கூறியதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் நாட்டின் பெயரை மட்டும் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்த முடியாது, என்றும் பிரதமர் மோடி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோடியை எதிர்ப்பது என்ற ஒரே ஒரு அஜெண்டாவுடன் " என அவர்கள் கூடியதாக எதிர்க்கட்சிகளை பிரதமர் விவரித்தார். இதுபோன்ற திசையற்றவர்களை தான் பார்த்ததில்லை என்று கூறிய மோடி, அவர்களின் நடத்தை அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்க முடிவு செய்ததை காட்டுகிறது என்று தெரிவித்தார். 2024 தேர்தலில் மக்கள் ஆதரவுடன் பாஜக எளிதாக வெற்றி பெறும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

மணிப்பூர் நெருக்கடி மற்றும் மே மாதம் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்ற வைரலான வீடியோ போன்ற விவகாரங்களில் பிரதமர் மோடி விரிவான அறிக்கை தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த கடுமையான கருத்துக்கள் வந்துள்ளன.

மணிப்பூர் சர்ச்சை பாராளுமன்றத்தில் எதிரொலித்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளியால், முக்கிய சட்டத்தை முன்வைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் முடங்கி உள்ளது. மணிப்பூர் பெண்கள் தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியான ஒரு நாளுக்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதிக அலுவல்கள் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்திற்கு முன் பேசிய பிரதமர் மோடி, தனது இதயம் வேதனையாலும் கோபத்தாலும் நிரம்பியுள்ளதாக கூறினார். "நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன், எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள். சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்க முடியாது," என்று அவர் கூறினார்.

இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் "இந்தியா" கூட்டணியாக அறிமுகமாகும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இரு அவைகளிலும் மணிப்பூர் பற்றிய விவாதிக்க தயார் என்று கூறிய மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே சட்டத்தை அதன் எதிர்ப்புகளால் தடுக்கிறது என்று குற்றம்சாட்டி வருகிறது. 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 4ஆவது நாளாக முடங்கியது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios