இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. 3300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைவாகவே உள்ளது. அதேபோல குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், உலகளவில் கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற விகிதத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7.9 பேர் என்ற விகிதத்திலேயே கொரோனா பரவிவருகிறது. அதேவேளையில், 39.62% பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோடில் வெறும் 2.94% பேர் மட்டுமே செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 3% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். உலகளவில் இறப்பு விகிதம், ஒரு லட்சத்துக்கு 4.2 பேர் என்ற அளவில் உள்ளது. ஆனால் இந்தியாவில், ஒரு லட்சத்துக்கு 0.2 என்ற அளவிலேயே உள்ளது. 

கொரோனா மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. முதற்கட்ட ஊரடங்கின்போது 7.1%ஆக இருந்த மீட்பு விகிதம், இரண்டாம் கட்ட ஊரடங்கின்போது 11.42% அதிகரித்த நிலையில், மூன்றாம் கட்ட ஊரடங்கில் 26.59%ஆக அதிகரித்தது. நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மீட்பு விகிதம் 39.62%ஆக அதிகரித்துள்ளது. இந்த மீட்பு விகிதம் சிகிச்சை முறையில் திருப்தியளிப்பதாக லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.