G20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவின் தலைமை எதிர்காலத்திற்கான வரைபடமாக மாற்றியுள்ளது; இது உலகளாவிய ஒத்துழைப்புக்கான களத்தை அமைத்துள்ளது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தியா ஜி20 மாநாடுக்குத் தலைமை பதவி வகிப்பது உலகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேக நேர்காணல் அளித்த பிரதமர், "ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகிப்பது பல நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

G20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவின் தலைமை எதிர்காலத்திற்கான வரைபடமாக மாற்றியுள்ளது; இது உலகளாவிய ஒத்துழைப்புக்கான களத்தை அமைத்துள்ளது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார். காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் கூட்டங்களை நடத்துவதற்கு ஜி20 உறுப்பினரான சீனாவின் ஆட்சேபனைகளை பிரதமர் மோடி உறுதியாக நிராகரித்துள்ளார். பிடிஐ நியூஸ் ஏஜென்சிக்கு பிரதமர் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

ஜிடிபியில் இருந்து மனிதத்துக்கு மாறுதல்

இந்தியாவின் ஜி20 தலைமைப் பதவியை உலகின் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பு என்று பிரதமர் விவரித்தார். மேலும் மக்களை மையமாகக் கொண்ட உலகத்தை நோக்கிய மாற்றம் குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாகக் கொண்ட பார்வைக்குப் பதிலாக, உலகம் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி நகர்கிறது என்றும், இந்த மாற்றத்தில், இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

நடுவானில் எகிப்து விமானத்துக்கு உதவி செய்த இந்திய விமானப்படையின் எரிபொருள் விமானம்!

இறையாண்மை உரிமைகள்

G20 உறுப்பினரான சீனாவும், உறுப்பினராக இல்லாத பாகிஸ்தானும், காஷ்மீர் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் ஜி20 மாநாடுகள் நடைபெறுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தன. இந்த அண்டை நாடுகளின் ஆட்சேபனை குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா தனது பகுதியில் கூட்டங்களை நடத்துவது இயல்பானது என்று தெரிவித்தார்.

“அந்த இடங்களில் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்த்திருந்தால் இப்படிப்பட்ட கேள்வி செல்லுபடியாகும். நம்முடையது இவ்வளவு பரந்த, அழகான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தேசம். ஜி20 கூட்டங்கள் நடக்கும்போது, நம்முடைய ஒவ்வொரு பகுதியிலும் கூட்டங்கள் நடத்தப்படுவது இயற்கையானது அல்லவா?" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா மேற்கொண்டுவரும் பயணத்தையும், உலகளாவிய வளர்ச்சியை நோக்கிய கொள்கைகளுக்கு அதன் அர்ப்பணிப்பையும் பிரதமர் வலியுறுத்தினார். இந்தியா உலக நலனுக்கான வழிகாட்டி ஒளியாகவும் செயல்படும் என்று கூறினார்.

2047ல் இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி இலக்குகள் குறித்தும், பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று அவர் அறிவித்தார். "ஊழல், சாதியம், வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு நமது நாட்டில் இடம் கிடையாது" என்று கூறினார்.

ஜி20 அமைப்பில் இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்த பிரதமர் மோடி, "ஜி 20 இல், இந்தியாவின் பார்வைகள் வெறும் யோசனைகள் அல்ல; அவை எதிர்காலத்திற்கான வரைபடமாக உலகத்தால் பார்க்கப்படுகின்றன" என்றார்.

"நீண்ட காலமாக, 100 கோடி பசித்த வயிறுகளின் நாடாக இந்தியா பார்க்கப்பட்டது. இப்போது, பெரிய கனவுகள் கொண்ட 100 கோடி மனங்கள் மற்றும் 200 கோடி திறமையான கரங்களின் நாடாகப் பார்க்கப்படுகிறது" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா என்கிற பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்! மத்திய அரசை விளாசும் ராகுல் காந்தி

உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சி

இந்திய மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார். "அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க இன்று இந்தியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது" என்றார்.

உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா விரைவில் இடம்பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில் ஐந்து இடங்கள் முன்னேறிய நாட்டின் சாதனையை அவர் எடுத்துரைத்தார். "இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மறுக்க முடியாதது, இந்தியா உலகின் முதன்மையான பொருளாதார சக்தி மையங்களில் ஒன்றாக மாறும் பாதையில் இருக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவிவரும் மோதல்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். "பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பல்வேறு மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல் மற்றும் ராஜதந்திரம் மட்டுமே வழி" என்று அவர் கூறினார்.

சைபர் பாதுகாப்பு

சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். "சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பு தவிர்க்க முடியாதது" என்று அவர் குறிப்பிட்டார்.

சைபர் பயங்கரவாதம், பணமோசடி உள்ளிட்ட இணைய அச்சுறுத்தல்களை சர்வதேச சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் பலம்

அதிகரித்து வரும் போலிச் செய்திகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளார். "போலி செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் ஆதாரங்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும். அவை சமூக அமைதியின்மையை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படலாம்" என்றார்.

ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சி ஆகியவை தான் இந்தியாவின் பலம் என்று பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இயற்கையையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சனாதன தர்மத்தை அவமதிக்கும் இந்தியா கூட்டணி: அமித் ஷா!