இந்தியா என்கிற பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்! மத்திய அரசை விளாசும் ராகுல் காந்தி
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க உயர்மட்டக் குழு அமைத்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மக்களவை, மாநில சட்டசபைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை விமர்சித்துள்ளார்.
‘பாரத் என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கருத்து இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதல் என்றும் ராகுல் காந்தி கூறினார். "இந்தியா, என்கிற பாரதம், மாநிலங்களின் ஒன்றியம்" என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிக்கை அளிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை அரசாங்கம் அமைத்ததைத் தொடர்ந்து ராகுல் காந்தி இவ்வாறு விமர்சித்துள்ளார்.
நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை மதிப்பீடு செய்து வழங்குவதற்காக எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு சனிக்கிழமை அமைத்தது.
இந்தக் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே. சிங், லோக்சபா முன்னாள் பொதுச் செயலர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உள்ளனர்.
செப்டம்பர் 18 முதல் 22 வரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, இந்தக் குழுவை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மும்பையில் இரண்டு நாள் நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், சிறப்புக் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எதுவும் மத்திய அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை.
1967 ஆம் ஆண்டு வரை மாநில சட்டமன்றங்களுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில், சில சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1970இல் மக்களவை கலைக்கப்பட்டது. இதன் விளைவாக, எல்லா மாநில சட்டப்பேரவைகளுக்கும் மக்களவையுடன் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.