சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 91. நாடு சுதந்திரம் அடைந்த பின், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி அன்னா ராஜம் மல்ஹோத்ரா. இவர் கடந்த 1927-ம் ஆண்டு, ஜூலை மாதம் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் பிறந்தவர். கோழிக்கோட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்த அன்னா ராஜம், அதன்பி்ன் சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 

சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை ராஜம் முடித்தார். அதன்பின் ஆர்.என். மல்ஹோத்ரா என்பவரை ராஜம் திருமணம் செய்துகொண்டார். கடந்த 1985 முதல் 1990-ம் ஆண்டுவரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர் ஆர்.என். மல்ஹோத்ரா. அன்னா ராஜம் மல்ஹோத்ரா கடந்த 1951-ம் ஆண்டு மெட்ராஸ் கேடர் பிரிவில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அன்னா ராஜமுக்கு வெளியுறவுத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று தீராத ஆசை, ஆனால், அவர் உள்நாட்டுப் பணிகளுக்கு பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதி அவரை உள்நாட்டில் பணி செய்ய அமர்த்தப்பட்டார். 

கடந்த 2012-ம் ஆண்டு தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு ராஜம் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ராஜாஜி பெண்கள் அரசுப்பணிக்கு வருவதை கடுமையாக எதிர்த்தார், எதிரான கொள்கைகள் கொண்டவராக இருந்தார். என்னால், சட்டம் ஒழுங்கு பணிகளை சரிவர செய்யமுடியாது என்று என்னிடம் அவர் தெரிவித்தார். ஆனால், எனக்கு வாய்ப்பு தாருங்கள், என்னை நான் நிரூபிக்கிறேன் என்று வாதம் செய்தேன். ஆனால், அதன்பின் என்னுடைய திறமையைப் பார்த்து ஒருமுறை பொதுக்கூட்டத்தில் என்னைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார் எனத் தெரிவித்தார்

ராஜம் மல்ஹோத்ரா தன்னுடைய இளம் வயதில் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதலில் பயி்ற்சி பெற்றிருந்தார். முதன் முதலில் ஓசூரில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் ஒசூர் பகுதியில் கிராமத்துக்குள் புகுந்த 6 யானைகளை சுட்டுக்கொல்ல முயன்ற போது அதைத் தடுத்து யானைகளை விரட்டியடிக்க முயற்சி எடுத்தார்.

ராஜம் மல்ஹோத்ரா 7 முதல்வர்களின் கீழ் பணியாற்றியுள்ளார், ராஜீவ்காந்தி கடந்த 1982-ம் ஆண்டு எம்.பி.யாக இருந்தபோது, அவர் ஆசிய  விளையாட்டுப் போட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது, ராஜீவ் காந்தியுடன் மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 8 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருடன் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மல்ஹோத்ரா உடன் சென்று பணியாற்றியுள்ளார்.