Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று ‘INDIA’ எதிர்பார்க்கிறது - கார்கே ட்வீட்..

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்

INDIA expects PM to make a detailed statement - kharge tweet
Author
First Published Jul 21, 2023, 11:22 AM IST

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த சூழலில் மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த 2 பெண்களில் ஒருவர் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மே-4 ம் நடந்ததாக கூறப்படும் இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ நேற்று முன் தினம் வைரலானதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மழைக்காலத் தொடரின் முதல் நாளான நேற்று, மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது, மேலும் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவான அறிக்கை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவையில் எதிர்க்கட்சிகள் 193 விதியின் கீழும், ராஜ்யசபாவில் விதி 176 மற்றும் விதி 267ன் கீழ் எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன.

இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய நிலையில் மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தால் மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதே போல் மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் பிரதமர் மோடி டேக் செய்து, மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில் “ நீங்கள் (பிரதமர்) நேற்று பாராளுமன்றத்தில் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. நீங்கள் கோபமாக இருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுடன் பொய்யான சமன்பாட்டைச் செய்வதற்குப் பதிலாக, முதலில் உங்கள் மணிப்பூர் முதல்வரை பதவி நீக்கம் செய்திருக்கலாம்.

இன்றைக்கு நீங்கள் நாடாளுமன்றத்தில் ஒரு சம்பவத்தைப் பற்றி மட்டுமல்ல, மாநிலத்திலும் மத்தியிலும் உங்கள் அரசாங்கம் நடத்திய 80 நாள் வன்முறையைப் பற்றி, நீங்கள் விரிவான அறிக்கையை வெளியிடுவீர்கள் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூர் கொடூரங்களுக்கு முதலமைச்சரே பொறுப்பு.! இனியும் ஆட்சியில் தொடர அருகதையில்லை- சிபிஎம்

Follow Us:
Download App:
  • android
  • ios