உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, பகவத் கீதையின் தத்துவமே நாட்டின் பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படை என்றார். மத்திய அரசின் கொள்கைகள் கீதையின் வழிகாட்டுதலில் உருவானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். சுமார் ஒரு லட்சம் பக்தர்கள், மாணவர்கள், சன்னியாசிகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைந்து பகவத் கீதையை பாராயணம் செய்த இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, உடுப்பி ஹெலிபேடில் இருந்து நிகழ்விடம் வரை பிரதமர் மோடி ஊர்வலமாகச் சென்றார்.

பாதுகாப்புக் கொள்கையில் கீதை தத்துவம்

பிரதமர் மோடி தனது உரையில், நாட்டின் பாதுகாப்புக் கொள்கையின் மையமானது பகவத் கீதையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தினார்.

"மண்ணில் அமைதியையும் உண்மையையும் நிலைநாட்ட அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று பகவத் கீதை கூறுகிறது. இதுவே நாட்டின் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை. ஸ்ரீ கிருஷ்ணர் போர்க்களத்தில் இருந்தே கீதையின் செய்தியை வழங்கினார்” என்று மோடி குறிப்பிட்டார்.

இந்தியா 'வசுதைவ குடும்பகம்' (உலகமே ஒரு குடும்பம்) என்ற கொள்கையை நம்புகிறது, அத்துடன் 'தர்மமே ரக்ஷித ரக்ஷிதஹ' (நாம் தர்மத்தைக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும்) என்ற மந்திரத்தையும் பின்பற்றுகிறது மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மிஷன் சுதர்சன சக்கரம்

நாட்டின் முக்கிய இடங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் எதிரிகள் ஊடுருவ முடியாத வகையில் பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கவே 'மிஷன் சுதர்சன சக்கரம்' தொடங்கப்பட்டுள்ளது. "எதிரி ஏதேனும் சாகசம் செய்ய திட்டமிட்டால், நமது சுதர்சன சக்கரம் அவர்களை அழிக்கும்," என்று மோடி கூறினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைக் குறிப்பிட்டு, முந்தைய அரசுகள் இதுபோன்ற தாக்குதல்களின்போது அமைதியாக இருந்தன என்றார். ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசிய அவர், "புதிய இந்தியா யாருக்கும் தலைவணங்காது, நாட்டு மக்களைக் காக்கத் தயங்காது. உலகிற்கே அமைதியை நிலைநாட்டவும் இந்தியாவுக்கு தெரியும்," என்றார்.

உடுப்பியின் சிறப்பு

உடுப்பியின் ஆன்மீக மற்றும் அரசியல் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி தனது பேச்சில் எடுத்துரைத்தார். அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுடன் உடுப்பிக்கு உள்ள தொடர்பை நினைவுபடுத்திய அவர், பீஜாவர் மடத்தின் மறைந்த ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே ராமர் ஜென்ம பூமி இயக்கத்திற்கு வழி வகுத்தார் என்றார்.

உடுப்பி, ஜன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மாதிரிக்கு கர்மபூமியாக இருந்தது என்றும் 1968-ல் ஜன சங்கத்தின் வி.எஸ். ஆச்சார்யாவை உடுப்பி மக்கள் நகராட்சிக்குத் தேர்ந்தெடுத்தபோது, உடுப்பி ஒரு புதிய ஆட்சி முறைக்கு அடித்தளமிட்டது என்றும் குறிப்பிட்டார்.

கீதை வழியில் கொள்கைகள்

‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ மற்றும் ‘சர்வஜன் ஹிதாய, சர்வஜன் சுகாய’ போன்ற கொள்கைகளுக்கு அடிப்படையாக இருப்பது கீதையில் உள்ள ஸ்லோகங்கள்கள் தான் என்ற பிரதமர் மோடி, ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிஎம் ஆவாஸ் போன்ற திட்டங்களுக்கு, கீதோபதேச மந்திரமே அடிப்படையாக உள்ளது என்றார்.

ஶ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற கொள்கையை ஆதரித்தார், இதுவே இந்தியாவின் 'தடுப்பூசி மைத்ரி' (Vaccine Maitri), சூரிய சக்தி கூட்டமைப்பு மற்றும் வசுதைவ குடும்பகம் போன்ற கொள்கைகளுக்கு அடிப்படையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீ கிருஷ்ண மடத்தில் மோடி

முன்னதாக, பிரதமர் மோடி உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா மடத்தில், சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்தார். அத்துடன், கனகதாசர் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றதாக நம்பப்படும் கனகன கிண்டிக்கு (Kanakana Kindi) தங்கக் கவசத்தை அர்ப்பணித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா மடம் 800 ஆண்டுகளுக்கு முன்பு துவைத தத்துவத்தின் நிறுவனர் ஸ்ரீ மத்வாச்சாரியாரால் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.