உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. கடந்த சில தினங்களாக தினமும் 3000 நபர்களுக்கு மிகாமல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 85,784 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 2,753 பேர் பலியாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 30,258 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் 52,773 மக்கள் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இதனிடையே இந்திய மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருவாகிய கொடிய கொரோனா வைரஸ் நோய் அங்கு கட்டுக்குள் வந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பியுள்ளது. அந்நாட்டில் இன்றைய நிலவரப்படி 82,941 மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 78,219 பேர் நலமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில் நோயின் தீவிரத்தால் 4,633 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பில் 89 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர். புதியதாக 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் 52 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா சீனாவை முந்தியிருப்பது மக்களிடையே கடும் அச்சத்தை விளைவித்து இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் நாட்டில் சமூக பரவல் ஏற்படவில்லை என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனிடயே கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலில் இருக்கும் ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெற இருக்கிறது. எனினும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அது மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.