India China: 2020க்குப் பின்னர் இந்தியா - சீனா எல்லையில் மீண்டும் இரண்டு முறை நடந்த மோதல்; வெளியான ரகசியம்!!
இந்தியா - சீனா ராணுவப் படைகள் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதற்குப் பின்னர் மீண்டும் அதே இடத்தில் இரண்டு ராணுவப் படைகளுக்கும் இடையே இரண்டு முறை மோதல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியா மற்றும் சீனப் படைகளுக்கு இடையே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஏசி) இதுவரை வெளியே வராத இரண்டு மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது தற்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட வீர விருதுகளுக்கான நிகழ்ச்சியின்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த வாரம் ராணுவத்தின் மேற்கு கமாண்டர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது, வாசிக்கப்பட்ட செய்தியில் எவ்வாறு இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளில் பதிலடி கொடுக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
ராணுவத்தின் மேற்கு கமாண்டர் அலுவலகம் சாந்திமந்திரில் உள்ளது. இங்கு நடந்த விழா தொடர்பான வீடியோவை கடந்த 13 ஆம் தேதி தங்களது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து இருந்தனர். ஆனால், உடனடியாக திங்கள் கிழமை அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்துவிட்டனர். இந்த வீடியோவில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா துருப்புக்கள் இடையே செப்டம்பர் 2021, நவம்பர் 2022 ஆகிய நாட்களில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி கோயில் கும்பாபிஷேகம்.. சீதா தேவிக்கு வாழை நார் புடவை அனுப்பிய அனகாபுத்தூர் நெசவு குழு..
இந்தியா - சீனா இடையிலான 3,488 கி. மீட்டர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இங்குதான் எல்லை மீறிய சீனா வீரர்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 2020, ஜூன் மாதம் மோதல் ஏற்பட்டது. கிழக்கு லடாக் எல்லையை உரிமை கோருவது தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டு இருந்தது. இத்துடன் மட்டுமின்றி எல்லைக்கட்டுப்பாட்டு கோடான தவாங் பகுதியிலும் சீன வீரர்கள் எல்லை மீறுவதற்கு முயற்சித்து இருந்தனர்.
டிசம்பர் 9, 2022 அன்று, சீன ராணுவத்தினர் தவாங் செக்டரின் யாங்ட்சே பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை மீற முயன்றனர் என்ற செய்தியை, சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
அப்போது பேசி இருந்த ராஜ்நாத் சிங், ''சீன முயற்சியை இந்திய ராணுவத்தினர் உறுதியான முறையில் எதிர்கொண்டனர். மோதலை இந்திய ராணுவ வீரர்கள் திறமையாக கையாண்டனர். நமது எல்லை இறையாண்மையை நமது வீரர்கள் பாதுகாத்தனர் என்பதை இந்த சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அவையில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
சமீபத்தில் நடந்து இருந்த விருது வழங்கும் விழாவிலும் இந்த மோதலில் சிறப்பாக பணியாற்றி இருந்த வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பற்றி முன்கூட்டியே சொன்ன ஏசியாநெட்.!!