உரி ராணுவ முகாம் தாக்குதலை நடத்துவதற்கு, இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், எல்லை கட்டுப்பாட்டு கோடு வேலியை ஏணி மூலம் தாண்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், உரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18–ந்தேதி அதிகாலையில் வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் , முகாமில்புகுந்து கொடூர தாக்குதல்கள் நடத்தினர். இதில், 19 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன.
இந்த தாக்குதல் குறித்து, ராணுவம் விசாரித்து வருகிறது. இதில், தீவிரவாதிகள் எப்படி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வேலியை தாண்டி, இந்தியாவுக்குள் புகுந்தார்கள் என்பதை கண்டறிய முக்கியத்துவம் தரப்படுகிறது.
முதல்கட்ட விசாரணையில், பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:–
உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த வந்த 4 தீவிரவாதிகளில் ஒருவர், சலாமாபாத் அருகே வேலிகளுக்கு இடையேயான இடைவெளியை பயன்படுத்தி எல்லை கட்டுப்பாட்டு கோடு வேலியை கடந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவி வந்துள்ளார்.
இந்த வேலியின் இடைவெளியை பயன்படுத்தி 4 தீவிரவாதிகளும் ஊடுருவவில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் சாக்குப்பைகளில் வெடிபொருட்கள், ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் எடுத்து வந்துள்ளார்கள்.
அந்த சாக்குப்பைகளை வைத்துக்கொண்டு, வேலியை தாண்டிவர அதிக நேரம் எடுக்கும் என்பதோடு, எப்போதுமே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்து உள்ளது. இதனால், அவர்கள் அதை செய்யவில்லை.
இதையடுத்து, இந்திய பகுதிக்குள் முதலில் ஊடுருவிய தீவிரவாதி ஒரு ஏணியை இந்திய பகுதியில் நிறுத்தி உள்ளார். மற்ற 3 பேரும், தங்கள் பக்கம் ஒரு ஏணியை நிறுத்தி உள்ளனர். இவ்விரு ஏணிகளுக்கு இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்தி, அதை பாதசாரி பாலம் போல பயன்படுத்தி, எல்லை கட்டுப்பாட்டுகோடு வேலியை எளிதாக தாண்டி ஊடுருவி இருக்கிறார்கள்.
உரி ராணுவ முகாமுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்திய எல்லைக்குள் 16ம் தேதி இரவு ஊடுருவி இருக்க வேண்டும். அவர்கள் கோஹலான், ஜப்லா கிராமங்களில் ஒரு நாள் தங்கி இருக்க வாய்ப்புள்ளது என ராணுவத்தினர் கருதுவதால் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணை குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்பட்டு, அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான யோசனைகளையும் விசாரணையின் முடிவில் தெரிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.