பாகிஸ்தானுக்‍கு எதிராக தேவைப்பட்டால் மீண்டும் துல்லியத் தாக்‍குதல் நடத்தப்படும் என இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

ராணுவ தினத்தையொட்டி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் நடத்தி வரும் நிழல்யுத்தம் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் காரணமாக, இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பே பாதிக்‍கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்‍கு எதிராக தேவைப்பட்டால், மீண்டும் துல்லியத் தாக்‍குதல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 2 மாதங்களுக்‍கு மேலாக நீடித்த வன்முறைகளை பாதுகாப்புப் படையினர் ஒன்றுபட்டு கட்டுக்‍குள் கொண்டு வந்துள்ளனர் என்றும், அம்மாநிலத்தில் மக்‍கள் இயல்பாக வாழ உரிய சூழலை பாதுகாப்புப் படையினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் ராவத் தெரிவித்தார்.

ராணுவ வீரர்கள் மிகவும் தியாக உணர்வுடன் நம் மண்ணுக்காக போராடி வருவதாகவும் ராவத் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.