கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருக்கும் நபர்களை பிடிப்பதற்காக ‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ 2-வது கட்டத்தை வருமான வரித்துறை நேற்று தொடங்கியது. இந்த நடவடிக்கையில் 60 ஆயிரம் பேர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

ரூபாய் நோட்டு தடை

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து கருப்புபணம் பதுக்கியவர்களை பிடிக்கும் முயற்சியை வருமான வரித்துறையினர் தீவிரப்படுத்தினர்.

ஆப்ரேஷன் கிளீன் மணி

இதற்காக ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற திட்டத்தை ஜனவரி 31-ந்தேதி வருமான வரித்துறையினர் செயல்படுத்தினர். இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் நோட்டு தடைக் காலத்தில் ரூ.2.5 லட்சத்துக்கும்அதிகமாக டெபாசிட் செய்து இருப்பவர்களின் கணக்கை ஆய்வு செய்து, 17.92 லட்சம் பேருக்கு ஆன்-லைன் மூலம் கேள்விகள் அனுப்பப்பட்டது. அதில், 9.46 லட்சம் பேர் முறையான பதிலை வருமான வரித்துறையினருக்கு அனுப்பி இருந்தனர்.

ரூ.9 ஆயிரம் கோடி

இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதியில் இருந்து,2017ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதிவரை வருமான வரித்துறை 2 ஆயிரத்து 362க்கும் அதிகமான சோதனைகள் நடத்தியது.

இதில் கணக்கில் வராத ரூ.9 ஆயிரத்து 334 கோடி பிடிபட்டது. இதில் ரூ. 622 கோடி ரொக்கமாகும். இதில் சுமார் 400 வழக்குகளை வருமான வரித்துறையினர் அமலாக்கப்பிரிவுக்கும், சி.பி.ஐ. அமைப்புக்கும் பரிந்துரை செய்தனர்.

2-வது கட்டம் தொடக்கம்

இதற்கிடையே ஆப்ரேஷன் கிளீன் மணி 2-ம் கட்டத்தை நேற்று வருமான வரித்துறை நேற்று தொடங்கியது.  இந்த ஆப்ரேஷன் கிளீன் மணி 2-ம் கட்டத்தில், ஏறக்குறைய 60 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் 1300 பேர் ரூபாய் நோட்டு தடை காலத்தில், மிகவும் சந்தேகத்துக்கு இடமான வகையில் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர்.6 ஆயிரம் பரிமாற்றங்கள் மிகவும் அதிகமான மதிப்பிலான  பணம் கொடுத்து பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன, 6,600 கணக்குகளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.