இம்மாதம் 10-ந்தேதியில் இருந்து டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கியில் ரூ. 2.50 லட்சத்துக்கு அதிகமாக டெபாசிட் செய்பவர்களின் கணக்குகளை அளிக்க வேண்டும் என வங்கிகளிடம் வருமான வரித்துறை கேட்டுள்ளது.

பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டை செல்லாது என அறிவித்தபின், அதை மாற்றுவதற்கு டிசம்பர் 30-ந்தேதி வரை 50 நாள் காலக்கெடுவும் விதித்தார். இந்த காலகட்டத்தில் மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, புதிய ரூ500, ரூ.2000 நோட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதனால், ஏராளமான பணக்காரர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் தொடங்கினர். அதற்கு கிடுக்கிப் பிடி போட்டது போல், வங்கியில் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட்செய்பவர்கள் வருமான வரித் துறையின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது வரும் என நிதியமைச்சகம் தெரிவித்தது.

ஒருவேளை முறையற்ற வருமானத்தில் இருந்த பணமாக இருந்தால், 200சதவீதம் அபராதமும், வரியும் செலுத்த வேண்டியது வரும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல், நவம்பர் 10ந்தேதியில் இருந்து, டிசம்பர் 30-ந்தேதி வரை வங்கியில் ரூ. 2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யும் அனைத்து கணக்குகள், டெபாசிட் செய்பவர்களின் விவரங்களை அறிக்கையாக அளியுங்கள் என அனைத்து வங்கிகளுககும் வருமான வரித்துறை முறைப்படி கேட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டுக்கு ஒரு முறை ரூ. 10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் குறித்த விவரங்களை மட்டுமே வங்கிகள் வருமான வரித்துறையினருக்கு அளிக்கும். ஆனால், கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்த முறை ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கும் கிடுக்கிப்பிடி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.