ரூ. 6100 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்.. தெலங்கானாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்..
தெலங்கானாவில் 6100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் 6100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரங்கல் சென்றார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன் அவர் புகழ்பெற்ற பத்ரகாளி கோவிலுக்குச் சென்று பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “வாரங்கலுக்கு 6100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், தொடக்கி வைக்கவோ போகிறோம். இந்த பணிகள் நெடுஞ்சாலைகள் முதல் ரயில்வே வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்த திட்டங்கள் தெலுங்கானா மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காசிப்பேட்டையில் 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் சரக்கு ரயில் பெட்டி உற்பத்தி பிரிவுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். நவீன உற்பத்தி அலகு மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டி உற்பத்தி திறனைக் கொண்டிருக்கும், மேலும் உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் துணை அலகுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். முன்னதாக அவர் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தெலங்க்கானாவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.