கடுமையான மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கேரளா தற்போது மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்குகள் நேற்று திறக்கப்பட்டது. கடுமையான பெட்ரோல் தட்டுப்பாடு இருந்தாலும் கேரள மக்கள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு சக்கர வாகனங்களை வரிசையில் நிறுத்தி பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். அந்த மக்களின் ஒழுக்கம் நிறைந்த இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது
தென் மேற்கு பருவ மழை தொடங்கி கேரளாவில் பலத்த மழை பெய்தாலும், இந்த மாதம் 8 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதி வரை கேரளாவில் மழை கோர தாண்டவம் ஆடிவிட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது.

14 மாவட்டங்கள் கனமழை மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்ட்டது. லட்சக்கணக்கான பொது மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருக்கிறது. முகாம்களில் தங்கியிருந்த பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஏடிஎம்கள், பெட்ரோல் பங்குகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து மீண்டும் குடியேறத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பு பங்க்குக்கு வரும் பொது மக்கள் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர்.
யாரும் முண்டியடித்துக் கொண்டு வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று நிதானமாக பெட்ரோல் நிரப்பிச் செல்லும் கேரள மக்களின் மாண்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

எந்த ஒரு பெட்ரோல் பங்க்கிலும் போலீசோ, பாதுகாப்புக்காக ஆட்களோ நிறுத்தப்படவில்லை. கேரள மக்களின் இந்த ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை முறை அவர்களை விரைவில் மீண்டு வரச் செய்யும் என்றே தெரிகிறது.
