இந்தியாவின் மெட்ரோ மனிதர் என அழைக்கப்படுவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீதரன். இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஸ்ரீதரன், தற்போது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதலா எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் இந்தியாவின் முதல் மெட்ரோ என்ற பெருமை கொண்ட கொல்கத்தா மெட்ரோ ரயிலை உருவாக்கியவர். லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர், விசாகபட்டிணம், விஜயவாடா, கோவை மெட்ரோ நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

இந்தியாவின் பிரபல முகமாக அறியப்பட்ட இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். கேரளாவின் தொழில்துறை வளர்ச்சியை கம்யூனிஸ்ட் கட்சி முடக்கியதாக குற்றச்சாட்டிய ஸ்ரீதரன், பாஜக தலைமை உத்தரவிட்டால் கேரள முதல்வராக போட்டியிடவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் மெட்ரோ மேன் ஸ்ரீதரனை பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் கே.சுரேந்திரன் அறிவித்துள்ளார். 

கேரளாவில் பாஜக சார்பில் விஜய யாத்திரா என்ற பிரச்சார பொதுக்கூட்டம் திருவல்லாவில் நடந்தது. அதில் பேசிய கேரள  பாஜக தலைவர் சுரேந்திரன், ஊழல் இல்லாத முன்மாதிரி மாநிலமாக கேரளாவை மாற்றுவதற்காக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருந்துவதாக அறிவித்தார். மேலும் மக்களுக்கு எது நல்லது என்பது நன்றாக தெரியும் என்றும், பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் நம்புவதாகவும் தெரிவித்தார். 

கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவரும், மக்களுக்கு நன்கு பரிட்சியமானவருமான மெட்ரோ மேன் ஸ்ரீதரனை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் எல்.டி.எஃப் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பினராயி விஜயனும், யூ.டி.எஃப் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.