ஐதராபாத்தில் ரம்ஜான் பண்டிகையின் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போதும் இடையூறு ஏற்படாமல் உதவி செய்த இரு போலீஸ்கார்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

அப்படி என்ன உதவி செய்தார்கள் என்கிறீர்களா?

ரம்ஜான் பாதுகாப்பு

ஐதராபாத் கலாபதேர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள்வெங்கடேஷ் நாயக், பிரதாப் சிங். இருவரும் ரம்ஜான் பண்டிகையின் போது இத்கா மிர் ஆலம் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.

அப்போது, சாலையில் முஸ்லிம் மக்கள் ஈத்கா தொழுகை நடத்தினர். அப்போது, தரையில் விரிக்க அட்டைகளையும், சாதாரண பேப்பர்களை விரித்து இருந்தனர்.

பேப்பர்கள் பறந்தன

தொழுகை நடந்து கொண்டு இருந்தபோது, காற்றில் பேப்பர் பறந்து, முஸ்லிம்களின் தொழுகைக்கு இடையூறு ஏற்பட்டது. அதைப் பார்த்துக்கொண்டு இருந்த போலீஸ்காரர்கள், நாயக், பிரதாப் சிங்கும் வேகமாக ஓடி வந்து, அந்த பேப்பர்களை சரி செய்து,  தொழுகையில் இடையூறு ஏற்படாதவாறு விரித்து வைத்தனர்.

‘பேப்பர் வெயிட்’ தொப்பி

 காற்று வேகமாக வீசவே, இருவரும் தங்களின் தலையில் அணிந்திருந்த தொப்பியை கழற்றி பேப்பர் மீது வைத்து காற்றில் பறக்காத வகையில் தடுத்தனர்.

போலீஸ்துறையில் மிக கவுரவம் மிக்க பொருளான தொப்பியை முஸ்லிம்களின் தொழுகையில் இடையூறு ஏற்படாமல் இருக்க ‘பேப்பர் வெயிட்’ போன்று பயன்படுத்திய போலீஸ்காரர்களின் மனிதநேயச் செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது.

50 ஆயிரம் லைக்

இது தொடர்பான வீடியோவை ஐதராபாத் நகர போலீசார் பேஸ்புக் டுவிட்டரில்வௌியிட்டனர். இதுவரை ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் ‘லைக்’ செய்துள்ளன, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘ஷேர்’ செய்துள்ளனர்.

மதத்தை மதிக்க வேண்டும்

இது குறித்து போலீஸ் கான்ஸ்டபிள் நாயக் கூறுகையில், “ முஸ்லிம்கள் தொழுகை நடத்தும்போது, அவர்கள் விரித்திருந்த பேப்பர்கள் காற்றில் பறந்தது, அவர்கள் தொழுதுகொண்டு இருக்கும் போது கூறினால் இடையூறாக இருக்கும் என்பதால், என் தலையின் மீதி இருந்த தொப்பியை ‘பேப்பர் வெயிட்டாக’ பயன்படுத்தினேன். போலீஸ்காரனாக, அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும்’’ என்றார்.

பாராட்டு

ஐதராபாத் போலீசாரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் இந்த வீடியோ பாராட்டியுள்ளரஜினிகாந்த் சிதாம்ஷெட்டி என்பவர் கூறுகையில், “ ஐதராபாத் போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். முடிந்தால் அவர்களின் செல்போன்எண்ணை தெரிவியுங்கள். என்னால் முடிந்தபரிசு அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.