மத்திய அரசு வங்கித்துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் பகுதியாக பொதுத்துறை வங்கிள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017ல் ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இந்த ஆண்டில் விஜயா பேங்க், தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. இதனால் பல வங்கி கிளைகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன. இதனால் வங்கி கிளைகளின் எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில் நீமச் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர கவுட் வங்கிகளின் கிளைகள் குறித்த விவரங்கள தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டு இருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: 2014-15ம் நிதியாண்டில் 26 பொதுத்துறை வங்கிகளின் 90 கிளைகள் மூடப்பட்டன அல்லது இணைக்கப்பட்டன. 2015-16ம் நிதியாண்டில்  126 கிளைகளும், 2016-17ம் நிதியாண்டில் 253 கிளைகளும், 2017-18ம் நிதியாண்டில் 2,083 கிளைகளும், 2018-19ம் நிதியாண்டில் 875 கிளைகளும் இணைக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன.

வங்கி கிளைகள் இணைப்பு அல்லது மூடல் நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டது ஸ்டேட் வங்கிதான். கடந்த 5 நிதியாண்டுகளில் மூடப்பட்ட மொத்தம் 3,427 வங்கி கிளைகளில் 75 சதவீதம் (2,568 கிளைகள்) ஸ்டேட் வங்கி உடையது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைக்கப்பட உள்ளதால் இந்த நிதியாண்டிலும்  வங்கி கிளைகள் இணைப்பு அல்லது மூடல் எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.