கைதுக்குப் பின் முதல் நாள் இரவில் விரக்தியுடன் இம்ரான் கான்; வெளியான முதல் புகைப்படம்!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முதல் நாள் இரவு சிறை புகைப்படம் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவரும், முன்னாள் முதல்வருமான இம்ரான் கான் அந்தப் படத்தில் மிகவும் விரக்தியுடன் காணப்படுகிறார்.
இஸ்லாமாபாத் போலீஸ் தலைமையகமான ஹெச் 11-ல் இன்று இம்ரான் கான் ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும், இன்று நீதிமன்ற விசாரணை போலீஸ் விருந்தினர் மாளிகையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானை நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு காவலில் எடுப்பதற்கு ஊழல் தடுப்பு அமைப்பு கோரிக்கை வைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
நேற்று இம்ரான் கான் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், அவரது ஆதரவாளர்கள் லாகூர் கான்ட்டினன்ட் மாளிகைக்குள் நுழைந்தனர். இதனால் பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து ராணுவ தலைமையகத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இதுவரை இல்லாத அளவிற்கு ராணுவ தலைமையகத்தின் மீது முதன்முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு ஏஜென்சி காவலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்?
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி, இம்ரான் கானின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தடியால் அவர் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது காலிலும் காயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் கைதுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் தெருக்களில் திரண்டதால் நாடு முழுவதும் பரவலான தீவைப்பு போன்ற கலவரங்கள் பதிவாகியுள்ளன. கலவரத்தில் குவெட்டா, பைசலாபாத், ஸ்வாட் மற்றும் லாகூரில் என தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இம்ரான் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அல்-காதிர் டிரஸ்ட் வழக்கு என்றால் என்ன?
இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்பின் மற்ற தலைவர்கள் அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இம்ரான் கானின் அரசாங்கத்திற்கும் ரியல் எஸ்டேட் அதிபருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசு கருவூலகத்திற்கு 50 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Photo Source: India Today.