நாடு முழுவதும் சிறுநீரை சேமிக்கத் தொடங்கினால் உர இறக்குமதி தேவையிருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

நாக்பூரில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதிய, புதிய கண்டுபிடிப்புகளுக்கான முக்கியத்துவம் குறித்து பேசினார். இயற்கை கழிவுகளிலிருந்து உயிரி எரிபொருட்கள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன என்பதை உதாரணம் காட்டி பேசிய அவர், மனித சிறுநீரை சேகரித்து உர இறக்குமதிக்கு முடிவு கட்டுவோம் எனவும் தெரிவித்தார். 

இதுதொடர்பாகப் பேசிய அவர், ''இது நடந்தால் இந்தியா உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய அவசியமே இருக்காது. இயற்கைக் கழிவுகளில் இருந்து எரிபொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. 

சிறுநீரில் நைட்ரஜனும் அம்மோனியம் சல்பேட்டும் உள்ளது. இதன்மூலம் எரிபொருட்களைத்  தயாரிக்க முடியும். விமான நிலையங்களில் சிறுநீரைச் சேமிக்கச் சொல்லி இருக்கிறேன். விவசாயத்துக்காக நாம் யூரியாவை இறக்குமதி செய்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடும் சிறுநீரைச் சேமிக்கும் பட்சத்தில், நாம் உரத்தை இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்காது'' என்றார் கட்கரி. 

முன்னதாக சில வருடங்களுக்கு முன்னதாக, தன்னுடைய சிறுநீரைச் சேமித்த கட்கரி, அதை டெல்லியில் உள்ள வீட்டுத் தோட்டத்துக்கு உரமாகப் பயன்படுத்துவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.