இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கை பேரிடர் வருகிறது: ஐஐடி இயக்குநர் சர்ச்சை பேச்சு!
இறைச்சி சாப்பிட மாட்டோம் என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஐஐடி இயக்குநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி ஐஐடியின் இயக்குனர் லக்ஷ்மிதர் பெஹரா என்பவர், இறைச்சி சாப்பிட மாட்டோம் என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறியதுடன், விலங்குகளை துன்புறுத்துவதால்தான் இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு, மேக வெடிப்புகள் போன்ற இயற்கை பேரிடர் நிகழ்வதாக கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
“அப்பாவி விலங்குகளை கொலை செய்கிறீர்கள். விலங்குகளை அறுப்பதை நிறுத்தாவிட்டால். இமாச்சலப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்படும். சுற்றுச்சூழலின் சீரழிவுக்கும் அதற்கும் தொடர்பு உள்ளது. இந்த கூட்டுவாழ்வு உறவை நீங்கள் இப்போது பார்க்க முடியாது ஆனால் உள்ளது.” என்று லக்ஷ்மிதர் பெஹரா தெரிவித்துள்ளார்.
“இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மொழிகிறது, வெள்ளம் ஏற்படுகிறது. மேக வெடிப்பு ஏற்படுகிறது. இதுபோன்று அடுத்தடுத்து ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. இவை அனைத்தும் விலங்குகள் மீதான கொடுமையின் விளைவுகள். மக்கள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.” மாணவர்களிடம் அவர் பேசும் வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
ஜி20 உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை உற்சாகமாக வரவேற்கும் இந்தியா!
நல்ல மனிதர்களாக மாற, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பிய அவர், இறைச்சி சாப்பிட வேண்டாம் என மாணவர்களிடம் கூறியதுடன், இறைச்சி சாப்பிடக் கூடாது என மாணவர்கள் உறுதியேற்குமாறு கேட்டுக் கொண்டார்.
மண்டி ஐஐடி இயக்குனர் லக்ஷ்மிதர் பெஹராவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
“இந்த மூடநம்பிக்கை முட்டாள்கள், 70 வருடங்களில் கட்டி எழுப்பிய சிறிய விஷயங்களையும் அழித்து விடுவார்கள்.” தொழிலதிபரும், ஐஐடி டெல்லி முன்னாள் மாணவருமான சந்தீப் மனுதானே என்பவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.