Perarivalan Release Case:வாதிட ஒன்றுமில்லையென்றால் பேரறிவாளனை விடுவிக்கிறோம்.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து
மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை உடனே விடுவித்து உத்தரவிடுகிறோம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் மேலாகியும் தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள், தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என எச்சரித்தது மட்டுமல்லாமல், ஒரு முறை காலக்கெடுவும் விதித்தனர். அப்பொழுது 7 பேர் விடுதலை தொடர்பான ஆவணங்களை முடிவெடுப்பதற்காக குடியரசு தலைவருக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுக்குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி. ஆர், கவாய் தலைமையிலான அமர்வில் பேரறிவாளன் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும் என்று எச்சரித்தனர். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?' எனவும் கேள்வியெழுப்பினர்.
மேலும், ஒரு வழக்கில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவரை விடுதலை செய்து, இதுதொடர்பான வழக்கை ஏன் முடிந்து வைக்கக் கூடாது? பேரறிவாளனை நீங்களே விடுதலை செய்கிறீர்களா அல்லது நீதிமன்றம் செய்யட்டுமா? என மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பியதோடு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் மற்றும் மத்திய அரசு தரப்பில் வாதத்தை முன்வைக்கப்பட்டது. அப்போது, அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சிக்கான அர்த்தம் என்ன? பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஏன் நியாயம் கற்பிக்க வேண்டும்? அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் எப்படி முடிவு எடுக்க முடியும்? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மே10ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின் பிடி நீதிமன்றமே முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.