கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு: டிஜிபி தகவல்!
கேரளாவில் வெடித்தது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு என அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. கிறிஸ்தவர்களின் யெகோவாவின் சாட்சிகள் வழிபாட்டு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாநாட்டு மையத்தில் நிகழ்ந்த அந்த குண்டு வெடிப்பில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது. மாநாட்டின் கடைசி நாளான இன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் மாநில தீவிரவாத தடுப்புப் படையும், போலீசாரும் தீவிர விசாராணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்!
இந்த நிலையில், கேரளாவில் வெடித்தது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு என அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு வெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், “கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு. இன்று காலை 9.40 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு, 3 குண்டுகள் வெடித்தது கண்டறியப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.” என்றார்.
பிரார்த்தனை கூட்டத்தில் வெடி விபத்து அல்ல குண்டு வெடிப்பு என உறுதிபடுத்திய முதல்வர் பினராயி விஜயன், களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்தார். மத்திய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.